கல்லூரியின் வரலாறு

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும்   தரமான கல்வியையும் சம வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்  உயரிய நோக்கத்தோடு, கல்வியாண்டு 2010-2011-ல்  தமிழக அரசால் தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில்,  இக்கல்லூரி தொடங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கின் வடிகால் பகுதியில் முற்றிலும் விவசாயம் சார்ந்த மக்கள் வசிக்கும் இப்பகுதியில் கல்லூரி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பெறுவோர் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால் உயர்கல்வி படிப்பவர்களின் சராசரியை உயர்த்தும் வகையிலும், பள்ளிக்கல்வியினை நிறைவு செய்யும் கிராமப்புற மாணவ மாணவியா்கள், மேலும் அவா்களது கல்வியினை தொடரும் வண்ணம்  கல்லூரிக்கல்வியினை பெறுவதற்கு வசதி ஏற்படு்த்தி தரும் வகையிலும்  இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பயனாக, கிராமப்புற மாணவ மாணவியா்கள்  அவா்களின் வேலை வாய்ப்பு சூழ்நிலையினை அதிகபடுத்தி கொண்டு வருகின்றனா். இது இருபாலர் பயிலும் கல்வி நிறுவனம். 2010-ஆம் ஆண்டில் B.A.தமிழ், B.A.ஆங்கிலம் ஆகிய இரண்டு இளங்கலை பாட வகுப்புளுடன்; ஆரம்பிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு இளம் வணிகவியல் பாடமும் 2013-ஆம் ஆண்டு B.A.வரலாறு பாடமும் தொடங்கப்பட்டு தற்போது நான்கு இளங்கலை பாடவகுப்புகளுடன் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 19 கௌரவ விரிவுரையாளர்களும், 14-க்கும் மேற்பட்ட அலுவலகப்பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் 

  1. இளங்கலை தமிழ்  – B.A. Tamil
  2. இளங்கலை ஆங்கிலம் – B.A. English
  3. இளங்கலை வரலாறு – B.A. History
  4. இளம் வணிகவியல் – B.Com

சேவைகள்

மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமன்றி தனிப்பட்ட ஆர்வம், தனிநபர் மேலாண்மை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக இக்கல்லூரியில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கணினி கற்பிக்கும் செயல்திட்டம் (CLP) 2019-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நாட்டு நல பணித்திட்டத்தின் மூலமாக (NSS) 100 மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்துதல் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். செஞ்சுருள் சங்கத்தின் (RRC) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இரத்த தான முகாமில் பங்கேற்று இரத்தத்தை தானமாக கொடுத்து வருகின்றனர். கல்லூரி நூலகத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் 2300-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தினமும் 6-க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் மாணவர்களின் பொது அறிவு மேம்பட வாங்கப்படுகிறது. மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக விளையாட்டுத்திடல் பெரிதாக அமைந்துள்ளது. கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். மெதுவாக கற்கும் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக வகுப்பு நேரம் தவிர்த்து கூடுதலாக சிறப்பு வகுப்புகள் (Slow Learners) எடுக்கப்படுகிறது. கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வேலை வாய்ப்பினை உறுதி செய்வதற்காக வேலை வாய்ப்பு மையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை (Scholorship) அவரவர் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளும் கல்லூரியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.